24 Jul
மதராசபட்டினம் – ராசராசசோழன் பார்வையில்…
Posted in அனுபவம், திரைப்படம், திரைவிமர்சனம் on 24.07.10
ஹாலிவுட் படங்களின் பிரம்மாண்டம்… பார்வையாளனை ஆக்கிரமிக்கும் கதைக்களம்…இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டவேண்டும். ஒரு சில தமிழ் இயக்குனர்கள் தான் இன்றைய தமிழ் திரைப்படங்களை தூக்கி நிறுத்துகின்றனர் அவர்களின் வரிசையில் நாம் விஜய்யையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆர்யாவின் நடிப்பு மிளிர்கிறது..ஆனால் இந்த படத்தில் காதநாயகிக்கு தான் அதிக வேலை…அதை கன கச்சிதமாக செய்துள்ளார் ஏமி ஜாக்சன். பல இடங்கள் டைட்டானிக் படத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை…வரை முறை இல்லாமல் எடுக்கப்படும் மற்ற தமிழ் படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் இதை குறையாக சொல்வதில் அர்த்தமில்லை.
சென்னையை பற்றிய ஏக்கம் நிச்சயமாய் வரும் சென்னைவாசிகளுக்கு மற்றும் சென்னையை தெரிந்தவர்களுக்கு. எப்படி இருந்த இடத்தை எப்படி கொடுமையாக மாற்றியுள்ளனர்…ஒரு அழகான நதியை… பெயர் சொன்னாலே மூக்கை மூடும் நிலைமைக்கு தள்ளியுள்ளனர் அதிகாரத்தில் இருந்தவர்களும் அறியாமை சனங்களும்…
தனியாக நகைச்சுவையை இணைக்காத இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்…கதையோடு பொருந்தி வரும் வாத்தியார் கதாபாத்திரம் ஆங்கிலம் கற்று தரும் இடங்கள் நாம் மனதார சிரிக்கலாம். புகைப்படத்திற்கு ஆசைப்பட்டு ஹனீஃபா வந்து போகும் ஆரம்பக் காட்சிகள் நல்ல நகைசுவை.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரைபடத்தில் தாலியை ஒரு முக்கிய பொருளாக காட்டியுள்ளனர் அதனால் எந்த சலிப்பும் வரவில்லை. இடைவேளையை அச்சு அசல் டைட்டானிக்கில் வருவதை போல் காட்டி இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
நாசர் குஸ்தி வாத்தியராக மிக நேர்த்தியாக நடித்துள்ளார்…சில இடங்களில் அவருக்கும் வெள்ளையர்களால் தீவிரவாதிகளாய் சித்தரிக்கப்படுபவர்களுக்கும் உள்ள தொடர்பு குழப்புகிறது…
வில்லன் நடிகர் நமக்கு கோபம் வரும் அளவிற்கு நடித்துள்ளார்…அவருக்கு பாராட்டுகள்…
வாழ்வா சாவா என்கின்ற கதாநாயகி , நாயகனின் போராட்டத்தை இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் நடைபெறுவதாக காட்டவேண்டும் என்கின்ற இயக்குனரின் எண்ணத்திற்கே…இந்தக் குறள் தான் ஞாபகம் வருகிறது
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
-செய்ய வேண்டியதை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை, அதை கையில் எடுத்த ஒருவனின் மன உறுதியை அடிப்படையாகக் கொண்டது. மற்றவை எல்லாம் துணைப் பொருட்கள்தான்.
படத்தின் இறுதி காட்சிகளில் பார்வையாளனை காட்சிகளின் பிரமாண்டத்தில் கட்டிப் போடுகிறார் இயக்குனர்…சுதந்திர தினத்தை கண்டதை போல் ஒரு உணர்வு…நம்மை அறியாமல் நம் மனதிற்குள் நுழைகிறது…
இந்த படத்தில் உள்ள குறைகளை சொல்வது சுலபம்…விட்டு விடுவோம்…அவை இந்த படம் மட்டும் இல்லை எல்லா தமிழ் படங்களிலும் உள்ள குறைகள் தான்.


