நான் ஒரு சராசரி தமிழன், சமூகத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு நம்மிடம் நல்ல தலைவர்கள் இல்லை என்பதை எந்த வித குழப்பமும் இன்றி என்னால் தெளிவாக சொல்ல முடியும். என்னுடைய பல பதிவுகளில் அனைத்து கட்சிகளையும் சாடி எழுதி இருக்கிறேன். ஆளும் கட்சியை சற்று பலமாக விமர்சித்து உள்ளேன்… நான் எந்த கட்சியையும் சாராதவன்…சிறு வயதில் என் தந்தை அரசியல் பற்றி பேசும் பொழுது “நான் சோத்து கட்சி” என்று கூறுவார் , என்னவென்றால் உணவு தானியங்களை மக்களுக்கு எளிதாக கிடைக்க செய்யும் எந்த கட்சியும் எனது கட்சி என்று அர்த்தம். ஆனால் இன்றைய நிலை என்ன…எழுதி எழுதி கை தான் வலிக்கிறது. உணவு பண்டங்களின் விலை குறைந்த பாடு இல்லை.
கணிபொறியும்…கணிபொறியோடு சேர்ந்த தொழில் புரட்சியால் இன்று நமது நாடு அதிக அளவு பணக்காரர்களை உற்பத்தி செய்துள்ளது… முக்கால்வாசி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பல குடும்பங்களில் இன்று பணம் கொழிக்கிறது…ஆனால் என்ன பயன்… புதிதாய் பணக்காரர்கள் ஆனவர்கள்…எப்படி பணத்தை பாதுகாக்கவேண்டும் என்று தெரியாமல் நுகர்வு கலாச்சாரத்தால் பல இளைஞர்கள் கடன் அட்டையில் அதிக வட்டியை கட்டிக் கொண்டுள்ளனர். ஏழைகள் பாடு சொல்லவே வேண்டாம்…பொருளாதார ஏற்ற தாழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. ஒரு அளவிற்கு மேல் சென்று கொண்டிருக்கும் அந்த வித்தியாசம் எப்படி எல்லாம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என்று எந்த ஒரு அரசியல்வாதியும் கவலைப் பட்டதாக தெரியவில்லை… விளைவுகளை பற்றி தெரியாமல் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே அவர்கள் குறிகோளாக இருகிறார்கள்.
இவையெல்லாம் என் மனதினில் நெருப்பாக இருந்தது…பதிவுலகம் திறந்த கதவு வழியே எழுத்துகளாக அள்ளி வீசுகின்றேன்…அதன் சிறு பொறி பட்டு ஏதேனும் மாற்றம் நிகழாத என்கின்ற ஒரு சிறு ஆசையே…
என் பதிவுகளை இன்றுவரை இடைவிடாது படித்துக் கொண்டிருக்கும் நண்பர் krpsenthil அவர்களுக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..ஆத்மார்த்தமான நன்றி…
ஒரு சிறு வேண்டுகோள் தமிழுணர்வு கொண்ட என் நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆரம்பித்துள்ள இனியதமிழ் திரட்டிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். பதிவர்கள் சம்பந்த பட்ட பல சேவைகள் அவர்கள் பரிசீலனையில் உள்ளது உங்கள் ஆதரவு அவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்


